எண்ணற்ற உயிரினத்தை
தத்தெடுத்த இவ்வுலகம்..
என்றோ ஓர் நாள்
உயிரற்று போய்அழியும் ../
அழிவின் அடையாளங்களை
அழகாய் எடுத்து கூறவே- இது
ஆன்மிகம் கூறும் அறிவியல்
ஏற்று கொள் அறிவே..../
பெற்றெடுத்து வளர்த்த மகன் - தன்னை
பேணாத அடிமை நிலை
ஒரு தாய் அடைவாள் :
முத்தம் ஈந்து மகிழ்ந்த மகள் - தனக்கு
முதலாளியாய் மாறும்
நிலைகண்டு உள்ளம் உடைவாள் :
கண்காட்சி பொருளாய் - பெண்
காண்போரை கவரவே சிரிப்பாள்:
உடையணிந்தும் கூட - தன்னின்
உடழகை நிர்வாணமாய் விரிப்பாள்:
போதையூட்டும் அறிவில்
மாறி போகும்
மனிதனின் வாழ்க்கை முறை :- அந்நிய
பேதை மீது பித்தம் கொண்டு
அவர்கள் வாழ்வில் படியும்
அழுக்கு கறை.. /
தகுதியற்றவர் தலைமை
பொறுப்பில் அலைவர் :
தன்னலம் பேணியே
பொதுநலம் அமைப்பர் :
நாணயம் இல்லா
காட்சியமைப்பு நடக்கும் -அந்நாளில்
நாணயத்திற்க்காகவே
ஆட்சியமைப்பு இருக்கும் ../
கொடுக்கும் தர்மத்தை
பொறுக்கும் நிலை அன்றிருக்காது :
செல்வங்கள் சேர்த்திருந்தும்-அவர்கள்
செயல்களோ வென்று இருக்காது :
ஆண்டுகள் சுருட்டப்பட்டு
வாரங்களாக சுழற்றப்படும் :
மாதங்கள் உரிக்கப்பட்டு
மணித்துளிகளாக விரிக்கப்படும் :
காலங்கள் கல்லறை நிமிடங்களை
எதிர்நோக்கியே பயணிக்கும் :
கண்களின் கனவுகள்
கண்ணீரில் மூழ்கியே மரணிக்கும் :
பூகம்பங்கள் மூன்று - இப்
பூமியை குலுக்கும் :
மேற்கு,கிழக்கு,மத்தியென-அரேபி ய
தேசத்தையே உலுக்கும் :
உயர்ந்த கட்டிடங்கள்
உருக்குலைந்து இடிந்து போகும் :
உயிரினங்கள்
உயிரற்று அழிந்து போகும் :
சரித்திரம் அந்நாளில் -தன்
நிஜத்தினை இழக்கும் :
விசித்திர விலங்கொன்று
பேசிக்கொண்டும் இருக்கும் :
அதிசயங்கள் படைப்பினத்தை
நிலைப்படுத்தும் -நிகழும்
அற்புதங்கள் படைத்தவனை
நினைவுப்படுத்தும் :
எண்ணிலடங்கா குள்ளர்கள்
கூட்டமிரண்டு - இம்
மண்ணகத்தை மூடும்
படையெடுத்து நின்று ../
நொடியில் பெருகும்
அதன் இனப்பெருக்கத்தால்
மக்கள் மரண பயம்
அடைவர் மனநடுக்கத்தால்.../
ஆக்சிஜன் விகிதம்
அடங்கி போகும் அந்நேரம் ..
ஆக்டோபஸ் புகையால்
நின்று போகும் உயிர் சுவாசம் ..../
தன்னை இறைவன் என்பான் ..
தஜ்ஜால் என்னும் ஒருவன்../
ஒரு கண் அவனுக்கு ஊனமாகும் :-அவனால்
ஒருமுறை மரணம் கூட குணமாகும் :
பிரமிப்புகள் அதிகம் நிகழ்த்தி
தன்னை பிரபலப்படுத்துவான் :- அவன் தன்
பேராற்றலால் இறைவனாக
தன்னை பிரகனப்படுத்துவான் :
பூமி ஓர் நாள்
தன் சுழற்சியை மாற்றும் :
பூகம்ப நிகழ்வினை
தன் உடம்பினில் ஏற்றும் :
கிழக்கு சூரியனை
மேற்கில் காட்டும் - இறை
மன்னிப்பென்னும் வாசல்
அன்று தான் பூட்டும் :
மாபெரும் நெருப்பொன்று
திரண்டு வரும் ..
மக்களை ஓரிடத்திலே
கொண்டு வரும் ../
ஏமன் நாட்டில் கூட்டப்படும்
அந்த மக்கள் திரள் :- அந்நாளில்
ஏற்காது அவனுக்கும்
கேட்காது மன்னிப்பின் குரல் :

No comments:
Post a Comment